Thursday, April 24, 2025

Thursday, November 22

அல்குர்ஆனில் விஞ்ஞானம்!

0 comments

அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!
இம் மண்ணில் வாழும் உயிர்ப் பிராணிகள் எவ்வாறு உருவாயின என்பதனை பலர் பலவிதமானக் கருத்துக்கள் கூறுவதைக் காண முடிகிறது. அல்குர்ஆன் கூறுவதையும், ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் கூறுவதையும் பார்ப்போம்.
“”அனைத்து உயிர்ப் பிராணிகளையும், அல்லாஹ் நீரிலிருந்து படைத்தான். அவற்றில் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு கால்களில் நடப்பவையும் உண்டு.(இவ்வாறு)தான் நாடியதை நாடியதிலிருந்து அல்லாஹ் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு படைக்கும் பொருட்டு யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். (அல்குர்ஆன் 24:45)
முட்டை முன்பு வந்ததா? குஞ்சு முன்பு வந்ததா? என்று இன்றும் தங்களை குழப்பிக் கொண்டு இருப்பவர்கள் இத்தகைய இறை வசனத்தின் மூலம் தெளிவு பெறமுடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: எல்லாப் பிராணிகளையும் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றில் ஊர்ந்து செல்லக் கூடியவையும், இரு கால்களில் நடப்பவையும், நான்கு கால்களில் நடப்பவையும் உண்டு என்று கூறுகிறான்.
ஊர்ந்து செல்வது பாம்பு, புழு,பூச்சிகளாகும். இரண்டு கால்கள் உடையவை பறவை இனங்களைக் குறிப்பிடுவது, நான்கு கால்களை உடையவை என்பது மிருகங்களை குறிப்பிடுவது.
அல்லாஹ் மிகத் தெள்ளத் தெளிவாகவே மனிதர்களுக்கு விளக்கியுள்ளான். இத்தகைய நிலைப்பாடுகளை அல்குர்ஆனிலிருந்து ஆராய்ச்சி செய்த பிரெஞ்ச் நாட்டு விஞ்ஞானி “லமார்க்' 1744 முதல் 1829 வரை ஆராய்ச்சி செய்துவிட்டு பரிணாமக் கோட்பாட்டை அறிவியல் பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதேபோல் 1809 முதல் 1888 வரை டார்வினும் ஆராய்ச்சி செய்துவிட்டு வான் மறையின் பரிணாமக் கோட்பாட்டை வலுவான ஆதாரங்களுடன் நிலைநாட்டுகிறார்.
“”நீர் நிலைகளிலிருந்து உயிரினங்கள் தோன்றியுள்ளன. இது விஞ்ஞானிகள் கதை.
அல்லாஹ் கூறுகிறான்.
“அல்லாஹ் எவ்வாறு முதல் முறையாக படைக்கிறான் என்பதனையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கிறான் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும்.” (அல்குர்ஆன் 29:19,20)
அல்லாஹ் தனது ஆற்றலை இவ்வாறு வெளிப்படுத்துகிறான். அல்லாஹ்விற்கு படைத்தல் என்பது எவ்விதக் கஷ்டமும் இல்லை. அவன் ஒன்றை நினைத்து உருவாக்க நினைத்தால் அது உடன் உருவாகிவிடும். விஞ்ஞான வளர்ச்சிகள் எவ்வளவு வந்தாலும் குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக எவ்வித விஞ்ஞானத்தையும் கண்டு பிடித்துவிட முடியாது.
சுமார் 1430 ஆண்டுகளுக்கு முன் உம்மி நபி என்று போற்றப்படும் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அல்லாஹ் எடுத்துரைத்த இத்தகைய அற்புதமான ஆராய்ச்சி வசனங்கள் இன்னும் ஏராளமாக அல்குர்ஆனில் புதைந்து கிடக்கின்றன.
இன்றைய காலங்களில் மழையைப் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் செயற்கை மழை பொழியும் திட்டத்தை உருவாக்கினார்கள். அதுவும் இறை வசனப்படியேதான் செய்ய முடிந்தது. மேகங்களின் கூட்டங்களை இணைக்கச் செய் வது. அதன் பிறகு அதனை குளிரச் செய்வது. மேகம் குளிர்ந்து விட்டால் தண்ணீராகி விடும். இவற்றைத்தான் விஞ்ஞானிகள் இந்த நூற் றாண்டில் செய்தார்கள்.
14 நூற்றாண்டுக்கு முன் அல்லாஹ்வின் அல்குர்ஆன் எவ்வாறு விளக்குகிறது என்பதனை பார்ப்போம்.
நபியே நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச் செய்து, அதன் பின் அதை ஒன்றின் மீது ஒன்று சேர்ந்து அடர்த்தியாக்குகிறான். அதன் பிறகு அதன் நடுவேயிருந்து மழை பொழிவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்திலிருந்து மழையைப் போல மேகக் கூட்டத்திலிருந்து பனிக் கட்டியையும் இறக்கி வைக்கின்றான். (24:43)
குர்ஆனின் வசனப்படியே செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டத்தை விஞ்ஞானிகள் செய்து காட்டினார்கள். மேலும் இந்த மேகக் கட்டியின் மூலமாகவே பனிக் கட்டிகள் இறங்குகின்றன என்பதனையும் அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். அது மட்டுமல்ல சமீப காலங்களில் அரசாங்கம் ஒரு திட்டத்துடன் ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதுதான் மழைநீர் சேகரிப்புத் திட்டம். இது வல்ல இறைவன் 1430 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த அற்புதச் சட்டம் என்பதனை இதோ அல்குர்ஆன் விளக்குகிறது.
“”இன்னும் காற்றுகளைச் சூழ் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து அதனை உங்களுக்கு நாம் (குடிநீராக) புகட்டுகிறோம். நீங்கள் அதனை சேகரித்து வைப்பவர்களாக இல்லை” ( அல்குர்ஆன்: 15:22)
மழைத் தண்ணீரை சேகரித்து வைத்திட வல்ல இறைவன் 1430 ஆண்டுகளுக்கு முன் அறிவித்துள்ளான். அந்த மழைதான் நமக்கு குடி நீராகவும் மண்ணில் விளையக்கூடிய பயிர்களுக்கு உயிராகவும் உள்ளது.
“”… வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை அது வரண்டு போனதை உயிர்ப்பிப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 30:24)
வல்லோனின் அல்குர்ஆனில் ஒவ்வொரு எழுத்துக்களிலும் விஞ்ஞானத்தை விளக்கி காட்டுகிறது. இந்த இறைவசனம் இறங்கிய இடம் மழைகள், விவசாயங்கள் இல்லாத பாலைவனப் பிரதேசமாக அரேபியா என்பதனைக் கவனிக்க வேண்டும்.
தற்போது நமது அரசாங்கம் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளது. அல்குர்ஆனில் புதைந்துள்ள வசனம் விஞ்ஞானத்தின் ஓர் எடுத்துக்காட்டாகவே அமைந்து உள்ளது என்பதனை உணர முடிகிறது. அதனால்தான் அல்லாஹ் தன் வசனங்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இதனை சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன என்று கூறுகிறான்.
மேலும் பூமி தட்டையானது என்று இன்றும் நம் மெளலவிகள் கற்றுவரும் கல்விக் கூடங்களில் சொல்லித் தரப்படுகிறது. ஆனால் வல்ல இறைவன் தன் நெறிநூலில் “”நிச்சயமாக அல்லாஹ்தான் இரவை பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் புகுத்துகிறான்… என்பதை நீர் பார்க்கவில்லையா?' (31:29)
இரவு படிப்படியாக மெல்ல மெல்ல பகலுக்கு மாறுவதும், இதுபோல் பகல் மெல்ல, மெல்ல இரவுக்கு மாறுவதையும் பார்க்கும் போது பூமி உருண்டை வடிவம் கொண்டது தான் என்பதனை அல்லாஹ் மறைவாகவே குறிப்பிடுகிறான்.
இதனை முதன் முறையாக 1597ம் ஆண்டு கடல் பயணம் மேற்கொண்ட சர்ஃபிரான்ஸிஸ் டிரேச் என்ற விஞ்ஞானிதான் ஆராய்ந்து பூமி உருண்டை என்பதனை அறிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன் அல்லாஹ்வின் அருள்நெறிநூல் குறிப்பிட்டதை இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வெளியாக்கி யுள்ளார்கள். இதே நிலையில்தான் பூமி, சூரியன், சந்திரன் போன்றவற்றை உருவாக்கிய வல்ல இறைவன் அவற்றின் நிலைகளை குறிப்பிடும்போது சூரியனை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன மற்ற கோள்கள் என்று கூறுகிறான்.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இதில்தான் இரவும்-பகலும் ஏற்படுகிறது. இந்த பூமியின் மீதுதான் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் உள்ளன. இந்த பூமியின் மீது விழும் சூரியனின் ஒளிக் கதிர்கள்தான் 24 மணி நேரத்திற்குள் சுற்றி முடிக்கிறது. சூரியனின் ஒளியை சந்திரன் வாங்கி அதுவே ஒளியை பூமிக்கு அளிக்கிறது. அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்.
“”சந்திரனை பிராசமாகவும், சூரியனை ஒளிக் கதிராகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்” ( 71:15,16)
மேலும் கூறுகின்றான் “”…. காலக் கணக்கை அறிவதற்காக சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்….” (6:96)
சந்திரன் தன் அச்சின் மீது தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. பூமியை சுற்றி வருவதற்கு எடுக்கும் கால அவகாசம் 29.53059 நாட்கள் பிடிக்கின்றன என்று அறிவியல்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. ஒரே சந்திரனை ஒரே நாளில் படிபடியாக உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு, நாட்காட்டியாக மனாஜில்களாக தோற்றமளிக்கிறது என்பதனை குர் ஆனின் வசனங்களும் தெளிவாக்குகின்றன.
“”… இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா…” (47:24)
“”…. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா?….” (4:82)
என்ற வசனங்கள் படியே விஞ்ஞானிகள் ஆராய்ந்து குர்ஆனில் புதைந்து கிடக்கும் அறிவியலை வெளிக்கொண்டு வருகின்றனர்.
“”ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்வீர்கள்…”
என்று அல்குர்ஆனின் வசனப்படியே இன்று வின்வெளிக்குச் செல்லும் விண்கலன்களை கண்டுபிடித்து பூமி என்ற நிலையிலிருந்து விண் வெளியில் உள்ள மற்றொரு நிலையான சந்திரனுக்கும், மற்ற கிரகங்களுக்கும் ஆராய்ந்து பார்க்கவே சென்று வரக்கூடிய நிலைப்பாட்டையும் கண்டுள்ளார்கள்.
அல்குர்ஆன் புதைந்து கிடக்கும் விஞ்ஞானத்தில் இதுவும் ஒரு சான்றாகும். இன்னும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம்.

-மண்டபம் M.அப்துல் காதிர்

DIPவுடன் இணையுங்கள்

மக்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடுவோரே

0 comments

ஆதமுடைய மக்கள் அனைவருமே தவறு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள் எனினும் ஆதமுடைய மக்களில் சிறந்தவர் தன் தவறை உணர்ந்து திருந்தி தன்னைப் படைத்த இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுவோரே என்பது அருமை நபிகளின் வாக்கு. நம்மைச் சிறந்தவர் ஆக்கும் பாவமன்னிப்புக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.


நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவதற்காக தவ்பாச் செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்! (அல்குர்ஆன்24:31)


மேலும் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவன் பக்கமே (பாவத்தை விட்டும்) தவ்பா செய்து மீட்சி பெறுங்கள்! (குர்ஆன்11 :3)


 நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வின்பால் கலப்பற்ற தவ்பாவாக (தூய்மையான பாவ மீட்சியாக) தவ்பாச் செய்து கொள்ளுங்கள்…. ( அல்குர்ஆன் 66:8)


 அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கும் அதிகமாக அல்லாஹுத் தஆலாவிடம் பிழை பொறுத்திட வேண்டுகிறேன், அவனளவில் தவ்பாச் செய்து மீளுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


 மனிதர்களே! அல்லாஹுத் தஆலாவிடம் தவ்பாச் செய்யுங்கள். அவனிடம் பிழை பொறுத்திட வேண்டுங்கள். நிச்சயமாக நான் ஒரே நாளில் நூறு முறை தவ்பாச் செய்கின்றேன் என நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)


 முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபியவர்களே ஒரு நாளைக்கு நூறு தடவை தவ்பா செய்தார்கள் என்றால்! ”நாம் எத்தனை தடவைகள் செய்ய வேண்டும்”? என்பதை எண்ணிப்பாருங்கள்.


சிறந்தவர் யார்?


 எல்லா மனிதர்களும் பாவம் செய்யக்கூடியவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் , பாவத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கக் கூடாது. செய்த தவறுகளைவிட்டு தூரமாகி அவற்றிற்காக அல்லாஹ்விடத்திலிருந்து ”பாவமன்னிப்புப்” பெற வேண்டும். இதுதான் உண்மையான ஒரு நல்லடியானின் பண்பாகும். ஆகவே , நாம் செய்திருக்கும் பாவங்களுக்காக உடன் பாவமன்னிப்புத் தேடுவது மிக மிக அவசியமாகும். யார் தாங்கள் செய்த பாவங்களுக்காக உடனடியாக ”தவ்பா” செய்கின்றார்களோ அவர்களின் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.


 அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம் , அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர், (அதிலிருந்து) விரைவில் (பாவ மன்னிப்புத் தேடி) தவ்பாச் செய்கிறார்களே அத்ததையவர்களுக்குத்தான் ஆகவே, அத்தகையோரின் ‘ தவ்பாவை’ அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், மேலும் அல்லாஹ் அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:17)


 நாம் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் நமது பாவங்களை மன்னிப்பதாகவும் வல்ல அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.


 தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையுற்றோராக நீங்கள் ஆகிவிட வேண்டாம்,நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் யாவையும் (நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிக்கிறவன். மிகக் கிருபையுடையவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. இன்னும் (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள், அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்ப்படிந்தும் விடுங்கள், (வேதனை வந்துவிட்டாலோ) பின்னர் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 39:53,54)


 உலகத்தில் நாம் யாருக்காவது தவறிழைத்து விட்டால் அவர்களைவிட்டும் ஒளிந்து தூரமாகி விடுகின்றோம். ஆனால், பாவம் செய்த தன் அடியார்களைப் பார்த்து அவனின் பக்கம் திரும்பி பாவமன்னிப்புத் தேடும்படி அந்த வல்ல அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான். இதைவிட தயாளத் தன்மை வேறு என்னதான் இருக்க முடியும்? தனக்கு மாறு செய்தவர்களை இறக்கத்தோடு அழைக்கின்றான். ஆகவே உங்களின் பாவங்களை உடன் நிறுத்திவிட்டு அவன் பக்கம் மீண்டு தவ்பாச் செய்யுங்கள்.


 இன்னும் பாவங்களை தொடரத்தான் போகின்றீர்களா? அல்லது இத்தோடு நிறுத்திக் கொண்டு தவ்பாச் செய்ய போகின்றீர்களா? ஆம்! உங்களை மரணம் வந்தடைவதற்கு முன்பாகவே, உடனடியாக அந்த ரஹ்மானிடம் உங்களின் தவறுகளுக்காக மனம் கலங்கி! கதறி! கண்ணீர் வடியுங்கள்! வல்ல அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்கப் போதுமானவன். மீதியுள்ள காலத்தையாவது அல்லாஹ்வுக்கு பொருத்தமான முறையில் வாழ்வதற்கு உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் ஏவியவைகளையே செய்யுங்கள், அவ்விருவரும் தவிர்த்தவைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்டவர்கள்தான் ஈருலக வெற்றியாளர்கள்.


 அல்லாஹ்வின் திருப்திதான் மிகப் பெரியது, அதுதான் மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)


 மரண நேரத்தில் செய்யப்படும் தவ்பா ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது


 யார் இப்போதனைகளுக்குச் செவிமடுக்காமல், இவ்வுலக வாழ்க்கையை மாத்திரம் இலட்சியமாகக் கருதி, மறுமைக்காக எவ்வித அமல்களும் செய்யாமலும் தான் செய்த பாவங்களுக்காக தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவருக்கு அவர் சென்றடையப் போகும் நரகத்தைக் காட்டப்படும்.


அப்போது அவர் நல்அமல்கள் செய்வதற்காக இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ அல்லாஹ்விடத்தில் அனுமதி வேண்டுவார், அதே போல் அவருடைய பாவங்களுக்காக மன்னிப்பும் கேட்பார் ; ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட ஒரு வினாடி கூட கூட்டப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் அவருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.


 அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.


 அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே! என்னை (உலகிற்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். ”நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:99,100)


 உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்) ”என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான். (பரிதவிப்பான்) ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தவேமாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (அல்குர்ஆன் 63:10,11)


 இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ”நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பே இல்லை, இத்தகையோருக்கு, துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:18)


 (மரணத் தருவாயில்) தொண்டைக் குழியை உயிர் வந்து சேராமலிருக்கும் வரை நிச்சயமாக அல்லாஹ் அடியானின் தவ்பாவை ஏற்றுக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)


 மேலே கூறப்பட்ட இறைவசனங்களையும், நபிமொழிகளையும், கவனமாகப் படித்தீர்களா? மீண்டும் பல முறை படித்துப்பாருங்கள். அமல்களில்லாமலும், தவ்பாச் செய்யாமலும் வாழ்ந்து மரணிப்பவர்கள் தங்களின் ”சக்ராத்” நிலையில் கதறக்கூடிய கதறலுக்கு அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். எத்தனையோ நமது சகோதரர்கள் அவர்கள் மரணிக்கும் போது தாங்கள் உலகத்தில் செய்த தவறுகளைப்பற்றி கவலை அடைந்தவர்களாக அவர்களின் உயிர் பிரிந்ததை பார்த்திருக்கின்றீர்கள், கேள்விப்பட்டும் இருக்கின்றீர்கள். உங்களின் உயிரும் அப்படிப் பிரியக்கூடாது என்பதற்காக இப்போதனையை உங்கள் முன் எடுத்து வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தான நிலையிலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.!


 யார் உடனடியாக பாவமன்னிப்புத் தேடாமல் மரணம் வரும்வரை பிற்படுத்துகின்றார்களோ அவர்களின் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். மரணம் வரும் வரை தவ்பாவைப் பிற்படுத்துவதென்பது மரணத்தின் நேரம் முன்கூட்டியே தெரியும் என்பதல்ல. இன்று தவ்பாச் செய்வோம், நாளை தவ்பாச் செய்வோம் என்று தவ்பாவை யார் அலட்சியப் படுத்துகின்றார்களோ, அவர்களுக்கு திடீர் என மரணம் வரும்போது அல்லாஹ்விடம் தவ்பாச் செய்வார்கள் அதை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்பதாகும். ஆகவே உடனடியாக தவ்பாச் செய்து கொள்ளுங்கள். காரணம் நாம் எப்போது மரணிப்போம் என்பது யாருக்குமே தெரியாது.


 பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகள்


 மனிதர்களின் உரிமைகள் சம்பந்தப்படாது, அல்லாஹ்வின் கட்டளைகள் விஷயத்தில் மாத்திரம் ஒருவர், மாறு செய்து பாவம் இழைத்திருப்பாராயின் அவர் அதிலிருந்து தவ்பா செய்து மீளுவதற்கு பின்வரும், மூன்று நிபந்தனைகள் உள்ளன.


 முதலாவது, தான் செய்து வந்த பாவத்தை விட்டு முற்றிலுமாக நீங்கி விடுவது.


இரண்டாவது, தமது பாவம் குறித்து உண்மையில் வருந்தி கைசேதப்படுவது.


மூன்றாவது, இனிமேல் ஒருபோதும் அப்பாவத்தைச் செய்வதேயில்லை என உறுதிகொள்வது.


 மனிதனுக்கு, மனிதன் செய்த குற்றமாயின் மேற்கூறப்பட்ட மூன்று நிபந்தனைகளுடன் நான்காவதொரு நிபந்தனையும் உள்ளது. அதாவது யாருக்கு நாம் அநியாயம் செய்தோமோ அவரிடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். உதாரணமாக பிறரது பொருளை அபகரித்திருந்தால், அதனை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். பிறரைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.


 உண்மையான தவ்பா


 இப்படி செய்வதுதான் உண்மையான தவ்பாவாகும். இந்நிபந்தனைகளுக்கு உட்பட்டு யார் தவ்பாச் செய்கின்றார்களோ நிச்சயமாக அவர்களின் தவ்பாக்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். உண்மை தவ்பா என்பது நாவிலிருந்து மாத்திரம் வெளியாகக் கூடிய ஒன்றல்ல, மாறாக உள்ளத்திலிருந்து வெளியாக வேண்டும். அதாவது தான் செய்த பாவத்தை உணர்ந்து, ”இப்படிப்பட்ட பாவத்தை நான் செய்திருக்கக் கூடாதே என்று ”மனம் கலங்கி, கவலைப்பட்டு செய்வதே உண்மை தவ்பாவாகும். அப்படி இல்லாமல் தான் சொல்வது தனக்கே புரியாமல் கேட்கப்படும் தவ்பா உண்மையான தவ்பா அல்ல என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.


 தவ்பாச் செய்வதின் சிறப்புக்கள்


 தவ்பாச் செய்வதினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. அல்லாஹ் நம்மை நேசிக்கிறான். அவனுடன் நம்முடைய தொடர்பு அதிகரிக்கின்றது. அவனுடைய பொருத்தம் நமக்குக் கிடைக்கின்றது.


நிச்சயமாக பச்சாதப்பட்டு மீளுகின்றவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், தூய்மையாக இருப்பவர்களையும் அவன் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 2:222)


உங்களில், ஒருவரது வாகனம் அதில்தான் அவருடைய உணவும், குடிநீரும் உள்ளது;அது காணமால் போய் அவர் ஆதரவிழந்தவராக ஒரு மரத்தின் நிழலில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவ்வாகனம் அவர் முன் திடீரனெத் தோன்றினால் அவர் எவ்வளவு மகிழ்வடைவாரோ, அதனைவிட (பன்மடங்கு) அதிகமாக தன் அடியான் தன்னளவில் தவ்பாச் செய்து மீளும் பொழுது அல்லாஹ் மகிழ்வடைகிறான். அவர் தனது வாகனத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மாபெரும் மகிழ்ச்சியில் திளைத்தவராக, இறைவா! நீ என் அடிமை நான் உன் எஜமானன் என்று கூறிவிடுகிறார். அதிக மகிழ்ச்சியில் திளைத்ததால் நாவு தடுமாறி இவ்வாறு தவறாகக் கூறிவிடுகிறார். (இம்மனிதனின் மாபெரும் மகிழ்ச்சியைவிட பன் மடங்கு அதிகமாக தன் அடியான் தவ்பாச் செய்யும் போது அல்லாஹுத் தஆலா மகிழ்வடைகிறான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம்)


 மரணிப்பதற்கு முன் உண்மையான தவ்பா செய்து, பாவமற்றவர்களாக மரணிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக.


தொகுப்பு: அபூஇப்ராஹீம்.


DIPவுடன் இணையுங்கள்

Social Icons

Followers

Featured Posts


Related Posts Plugin for WordPress, Blogger...

Sample Text

Weather

Followers

 

Dinul Islam Paradise. Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com