அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!
இம் மண்ணில் வாழும் உயிர்ப் பிராணிகள் எவ்வாறு உருவாயின என்பதனை பலர் பலவிதமானக் கருத்துக்கள் கூறுவதைக் காண முடிகிறது. அல்குர்ஆன் கூறுவதையும், ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகள் கூறுவதையும் பார்ப்போம்.
“”அனைத்து உயிர்ப் பிராணிகளையும், அல்லாஹ் நீரிலிருந்து படைத்தான். அவற்றில் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு கால்களில் நடப்பவையும் உண்டு.(இவ்வாறு)தான் நாடியதை நாடியதிலிருந்து அல்லாஹ் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அவ்வாறு படைக்கும் பொருட்டு யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். (அல்குர்ஆன் 24:45)முட்டை முன்பு வந்ததா? குஞ்சு முன்பு வந்ததா? என்று இன்றும் தங்களை குழப்பிக் கொண்டு இருப்பவர்கள் இத்தகைய இறை வசனத்தின் மூலம் தெளிவு பெறமுடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: எல்லாப் பிராணிகளையும் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றில் ஊர்ந்து செல்லக் கூடியவையும், இரு கால்களில் நடப்பவையும், நான்கு கால்களில் நடப்பவையும் உண்டு என்று கூறுகிறான்.
ஊர்ந்து செல்வது பாம்பு, புழு,பூச்சிகளாகும். இரண்டு கால்கள் உடையவை பறவை இனங்களைக் குறிப்பிடுவது, நான்கு கால்களை உடையவை என்பது மிருகங்களை குறிப்பிடுவது.
அல்லாஹ் மிகத் தெள்ளத் தெளிவாகவே மனிதர்களுக்கு விளக்கியுள்ளான். இத்தகைய நிலைப்பாடுகளை அல்குர்ஆனிலிருந்து ஆராய்ச்சி செய்த பிரெஞ்ச் நாட்டு விஞ்ஞானி “லமார்க்' 1744 முதல் 1829 வரை ஆராய்ச்சி செய்துவிட்டு பரிணாமக் கோட்பாட்டை அறிவியல் பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதேபோல் 1809 முதல் 1888 வரை டார்வினும் ஆராய்ச்சி செய்துவிட்டு வான் மறையின் பரிணாமக் கோட்பாட்டை வலுவான ஆதாரங்களுடன் நிலைநாட்டுகிறார்.
“”நீர் நிலைகளிலிருந்து உயிரினங்கள் தோன்றியுள்ளன. இது விஞ்ஞானிகள் கதை.
அல்லாஹ் கூறுகிறான்.
“அல்லாஹ் எவ்வாறு முதல் முறையாக படைக்கிறான் என்பதனையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கிறான் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும்.” (அல்குர்ஆன் 29:19,20)
அல்லாஹ் தனது ஆற்றலை இவ்வாறு வெளிப்படுத்துகிறான். அல்லாஹ்விற்கு படைத்தல் என்பது எவ்விதக் கஷ்டமும் இல்லை. அவன் ஒன்றை நினைத்து உருவாக்க நினைத்தால் அது உடன் உருவாகிவிடும். விஞ்ஞான வளர்ச்சிகள் எவ்வளவு வந்தாலும் குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக எவ்வித விஞ்ஞானத்தையும் கண்டு பிடித்துவிட முடியாது.
சுமார் 1430 ஆண்டுகளுக்கு முன் உம்மி நபி என்று போற்றப்படும் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அல்லாஹ் எடுத்துரைத்த இத்தகைய அற்புதமான ஆராய்ச்சி வசனங்கள் இன்னும் ஏராளமாக அல்குர்ஆனில் புதைந்து கிடக்கின்றன.
இன்றைய காலங்களில் மழையைப் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் செயற்கை மழை பொழியும் திட்டத்தை உருவாக்கினார்கள். அதுவும் இறை வசனப்படியேதான் செய்ய முடிந்தது. மேகங்களின் கூட்டங்களை இணைக்கச் செய் வது. அதன் பிறகு அதனை குளிரச் செய்வது. மேகம் குளிர்ந்து விட்டால் தண்ணீராகி விடும். இவற்றைத்தான் விஞ்ஞானிகள் இந்த நூற் றாண்டில் செய்தார்கள்.
14 நூற்றாண்டுக்கு முன் அல்லாஹ்வின் அல்குர்ஆன் எவ்வாறு விளக்குகிறது என்பதனை பார்ப்போம்.
நபியே நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச் செய்து, அதன் பின் அதை ஒன்றின் மீது ஒன்று சேர்ந்து அடர்த்தியாக்குகிறான். அதன் பிறகு அதன் நடுவேயிருந்து மழை பொழிவதைப் பார்க்கிறீர். இன்னும் அவன் வானத்திலிருந்து மழையைப் போல மேகக் கூட்டத்திலிருந்து பனிக் கட்டியையும் இறக்கி வைக்கின்றான். (24:43)
குர்ஆனின் வசனப்படியே செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டத்தை விஞ்ஞானிகள் செய்து காட்டினார்கள். மேலும் இந்த மேகக் கட்டியின் மூலமாகவே பனிக் கட்டிகள் இறங்குகின்றன என்பதனையும் அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். அது மட்டுமல்ல சமீப காலங்களில் அரசாங்கம் ஒரு திட்டத்துடன் ஒரு சட்டமும் கொண்டு வந்தது. அதுதான் மழைநீர் சேகரிப்புத் திட்டம். இது வல்ல இறைவன் 1430 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த அற்புதச் சட்டம் என்பதனை இதோ அல்குர்ஆன் விளக்குகிறது.
“”இன்னும் காற்றுகளைச் சூழ் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து அதனை உங்களுக்கு நாம் (குடிநீராக) புகட்டுகிறோம். நீங்கள் அதனை சேகரித்து வைப்பவர்களாக இல்லை” ( அல்குர்ஆன்: 15:22)
மழைத் தண்ணீரை சேகரித்து வைத்திட வல்ல இறைவன் 1430 ஆண்டுகளுக்கு முன் அறிவித்துள்ளான். அந்த மழைதான் நமக்கு குடி நீராகவும் மண்ணில் விளையக்கூடிய பயிர்களுக்கு உயிராகவும் உள்ளது.
“”… வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை அது வரண்டு போனதை உயிர்ப்பிப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.” (அல்குர்ஆன் 30:24)
வல்லோனின் அல்குர்ஆனில் ஒவ்வொரு எழுத்துக்களிலும் விஞ்ஞானத்தை விளக்கி காட்டுகிறது. இந்த இறைவசனம் இறங்கிய இடம் மழைகள், விவசாயங்கள் இல்லாத பாலைவனப் பிரதேசமாக அரேபியா என்பதனைக் கவனிக்க வேண்டும்.
தற்போது நமது அரசாங்கம் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் சட்டமாகக் கொண்டு வந்துள்ளது. அல்குர்ஆனில் புதைந்துள்ள வசனம் விஞ்ஞானத்தின் ஓர் எடுத்துக்காட்டாகவே அமைந்து உள்ளது என்பதனை உணர முடிகிறது. அதனால்தான் அல்லாஹ் தன் வசனங்கள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இதனை சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன என்று கூறுகிறான்.
மேலும் பூமி தட்டையானது என்று இன்றும் நம் மெளலவிகள் கற்றுவரும் கல்விக் கூடங்களில் சொல்லித் தரப்படுகிறது. ஆனால் வல்ல இறைவன் தன் நெறிநூலில் “”நிச்சயமாக அல்லாஹ்தான் இரவை பகலில் புகுத்துகிறான். பகலை இரவில் புகுத்துகிறான்… என்பதை நீர் பார்க்கவில்லையா?' (31:29)
இரவு படிப்படியாக மெல்ல மெல்ல பகலுக்கு மாறுவதும், இதுபோல் பகல் மெல்ல, மெல்ல இரவுக்கு மாறுவதையும் பார்க்கும் போது பூமி உருண்டை வடிவம் கொண்டது தான் என்பதனை அல்லாஹ் மறைவாகவே குறிப்பிடுகிறான்.
இதனை முதன் முறையாக 1597ம் ஆண்டு கடல் பயணம் மேற்கொண்ட சர்ஃபிரான்ஸிஸ் டிரேச் என்ற விஞ்ஞானிதான் ஆராய்ந்து பூமி உருண்டை என்பதனை அறிவித்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன் அல்லாஹ்வின் அருள்நெறிநூல் குறிப்பிட்டதை இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வெளியாக்கி யுள்ளார்கள். இதே நிலையில்தான் பூமி, சூரியன், சந்திரன் போன்றவற்றை உருவாக்கிய வல்ல இறைவன் அவற்றின் நிலைகளை குறிப்பிடும்போது சூரியனை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன மற்ற கோள்கள் என்று கூறுகிறான்.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இதில்தான் இரவும்-பகலும் ஏற்படுகிறது. இந்த பூமியின் மீதுதான் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் உள்ளன. இந்த பூமியின் மீது விழும் சூரியனின் ஒளிக் கதிர்கள்தான் 24 மணி நேரத்திற்குள் சுற்றி முடிக்கிறது. சூரியனின் ஒளியை சந்திரன் வாங்கி அதுவே ஒளியை பூமிக்கு அளிக்கிறது. அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்.
“”சந்திரனை பிராசமாகவும், சூரியனை ஒளிக் கதிராகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்” ( 71:15,16)
மேலும் கூறுகின்றான் “”…. காலக் கணக்கை அறிவதற்காக சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்….” (6:96)
சந்திரன் தன் அச்சின் மீது தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. பூமியை சுற்றி வருவதற்கு எடுக்கும் கால அவகாசம் 29.53059 நாட்கள் பிடிக்கின்றன என்று அறிவியல்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட உண்மை. ஒரே சந்திரனை ஒரே நாளில் படிபடியாக உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கு, நாட்காட்டியாக மனாஜில்களாக தோற்றமளிக்கிறது என்பதனை குர் ஆனின் வசனங்களும் தெளிவாக்குகின்றன.
“”… இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா…” (47:24)
“”…. அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா?….” (4:82)
என்ற வசனங்கள் படியே விஞ்ஞானிகள் ஆராய்ந்து குர்ஆனில் புதைந்து கிடக்கும் அறிவியலை வெளிக்கொண்டு வருகின்றனர்.
“”ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்வீர்கள்…”
என்று அல்குர்ஆனின் வசனப்படியே இன்று வின்வெளிக்குச் செல்லும் விண்கலன்களை கண்டுபிடித்து பூமி என்ற நிலையிலிருந்து விண் வெளியில் உள்ள மற்றொரு நிலையான சந்திரனுக்கும், மற்ற கிரகங்களுக்கும் ஆராய்ந்து பார்க்கவே சென்று வரக்கூடிய நிலைப்பாட்டையும் கண்டுள்ளார்கள்.
அல்குர்ஆன் புதைந்து கிடக்கும் விஞ்ஞானத்தில் இதுவும் ஒரு சான்றாகும். இன்னும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம்.
-மண்டபம் M.அப்துல் காதிர்
DIPவுடன் இணையுங்கள்