கலீபாவாக தேர்வுசெய்ய்ப்படும் நபருக்கு கீழ்கண்ட ஏழு தகுதிகள் இருக்கவேண்டும். இந்த ஏழு தகுதிகளும் அடிப்படை தகுதிகளாகும். இவற்றில் ஒன்று இல்லாவிட்டாலும் அவர் கலீபாவாக ஆகமுடியாது.
1. அவர் முஸ்லிமாக இருக்கவேண்டும், முஸ்லிமல்லாத ஒருவரை கிலாபத்தின் தலைமை பொறுப்புக்கு ஒருபோதும் நியமனம் செய்யமுடியாது ஏனெனில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.
وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا
மூமின்கள் மீது (ஆதிக்கம் செலுத்துவதற்கு) அல்லாஹ் காபிர்களுக்கு எந்த வழியையும் ஆக்கமாட்டான். (4:141)
ஆட்சிஅதிகாரம் என்பது ஆட்சிபுரியப்படும் மக்கள் மீது ஆட்சியாளர்கள் பிரயோகிக்கும் பலமான ஆயுதமாகும், இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள லன் என்ற வார்த்தை காபிர்கள் ஆட்சிஅதிகாரத்தை கையில் வைத்திருப்பதற்கு இருக்கும் திட்டவட்டமான நிரந்தர தடையை குறிக்கின்ற கரீனாவாக (Indicator)(قرينة) இருக்கிறது, காபிர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ள இத்தகைய ஆட்சிப்பொறுப்பு கலீபா பதவிக்கும் மட்டுமல்ல அது மற்ற எல்லாவகையான ஆட்சிஅதிகாரத்திற்கும் பொருந்தக்கூடியது.
2. கலீபா பதவிக்கு வருபவர் ஆணாக இருக்கவேண்டும், ஆகவே எந்த சூழலிலும் பெண்கள் கலீபா பதவிக்கு வரமுடியாது. ஏனெனில் சட்டரீதியாக அது செல்லுபடியாகாது.
அபூபக்கரா (ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஸஹீஹ் ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
"ஒட்டகப்போர் நடந்தபோது நான் முஸ்லிம்களுடன் இணைந்து போர் செய்ய சென்ற அந்த நாட்களில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, பாரஸீக நாட்டு மக்கள் கிஸ்ராவின் புதல்வியை பட்டத்து ராணியாக முடிசூட்டிவிட்டார்கள் என்ற செய்தி வந்தபோது அல்லாஹ்வின்தூதர்(ஸல்) பின்வருமாறு கூறினார்கள்.
لن يفلح قوم ولو أمرهم امرأة
"பெண் ஒருவர் ஆட்சியாளராக இருக்கும் பட்சத்தில் அந்த சமூகம் ஒரு போதும் வெற்றி பெறாது"
பெண்கள் ஆட்சிப்பொறுப்பு வகிப்பதற்கு அனுமதியில்லை என்பதை இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது, இதன் சொற்றொடர் ஒரு கோரிக்கையின் (طلب-command) வடிவத்தில் இருக்கின்ற காரணத்தால் பெண்களை ஆட்சிப் பொறுப்புக்கு நியமிப்பதற்கு இதில் கடும் கண்டனம் அடங்கியிருப்பதோடு அதற்குரிய திட்டவட்டமான தடையையும் இது குறிக்கிறது, ஹதீஸின் சொற்றொடரில் பெண்கள் ஆட்சியாளராக நியமிக்கப்படுவதற்கு உறுதியாக தடைவிதிக்கும் கரீனா இடம் பெற்றிருப்பதால் பெண்களை ஆட்சிஅதிகாரத்திற்கு நியமனம் செய்வது ஹராமாகும் , ஆகவே பெண்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வருவதை தடைசெய்யும் பொதுவான ஆதாரம் இந்த ஹதீஸில் இருப்பதால் இந்தத்தடை கிலாபா பொறுப்புக்கும் மற்ற அனைத்து வகையான ஆட்சிப்பொறுப்புக்கும் பொருந்தக்கூடியதே.
3. கலீபா பதவிக்கு வருபவர் வயதுவந்தவராக இருக்கவேண்டும், கிலாபத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும் நபர் சிறுவராக இருப்பதற்கு அனுமதியில்லை.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அலீ இப்ன் அபூதாலிப் (ரலி) அறிவித்திருப்பதாவது.
رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يكبر وعن المبتلى حتى يعقل
"மூன்று வகையினர் மீது (அல்லாஹ்வின்) எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிடுகிறது : உறக்கத்தில் இருப்பவர் விழித்தெழும்வரை. சிறுவறாக இருப்பவர் பருவவயதை அடையும்வரை. புத்திசுவாதீனம் இல்லாதவர் அறிவாற்றல் பெறும்வரை"
ஆகவே எவர் மீது அல்லாஹ்(சுபு) வின் எழுதுகோல் உயர்த்தப்பட்டுவிட்டதோ அவர் தன்னுடைய விவகாரங்களை தானே நடத்திச் செல்லமுடியாது. எனவே அவர் சட்டப்படி பொறுப்புள்ளவராக (முகல்லfப்) ஆகமுடியாது, இதனடிப்படையில் அவர் கலீபா பதவிக்கோ அல்லது வேறெந்த ஆட்சிப்பொறுப்புக்கோ சட்டரீதியாக வரமுடியாது. தனது சொந்த விவகாரங்களை நடத்திச் செல்வதற்கு சட்டரீதியான உரிமை அவருக்கு கிடையாது எனும்போது மற்றவர்கள் விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அவர் எவ்வாறு ஏற்கமுடியும்?
அப்துல்லாஹ் இப்ன் ஹிஷாம் என்ற சிறுவரின் பைஅத்தை ஏற்றுக்கொள்ள அல்லாஹ்வின்தூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள் என்ற ஹதீஸ் அறிவிப்பு சிறுவர்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வரமுடியாது என்பதற்கு மற்றொரு ஆதாரமாக இருக்கிறது. ஏனெனில் பைஅத் கொடுப்பதற்கு தகுதியில்லாத ஒருவர் கலீபாவாக நியமனம் பெறுவதற்கு பைஅத் பெறமுடியாது.
4. அவர் புத்திசுவாதீனம் உள்ளவராக இருக்கவேண்டும், புத்திசுவாதீனம் இல்லாத ஒருவரை கலீபாவாக நியமிப்பதற்கு அனுமதியில்லை
... وعن المبتلى حتى يعقل
ஏனெனில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) எழுதுகோல் உயர்த்தப்பட்டவர்களில் புத்திசுவாதீனம் இல்லாதவர்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள், இவர்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நடத்திச்செல்வதற்கு ஆற்றல் பெறாதவர்கள் என்ற அடிப்படையில் அல்லாஹ்(சுபு) வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பிலுள்ள கலீபா பதவியை வகிக்கமுடியாது.
5. அவர் நீதிசெலுத்தும் மனிதராக இருக்கவேண்டும், கலீபா பொறுப்புக்கு வருபவர் பாவியாக (fபாஸிக்) இருக்க முடியாது. கலீபா பதவிக்கு வருவதற்கும் அதில் தொடர்ச்சியாக இருப்பதற்கும் நீதிசெலுத்தும் பண்பு இருக்கவேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும். ஏனெனில் அல்லாஹ்(சுபு) சாட்சியம் அளிப்பவர்கள் நீதிசெலுத்துபவர்களாக இருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறான்,
وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ
உங்களிலுள்ள நிதிசெலுத்துபவர்கள் சாட்சியம் அளிக்கட்டும்……
(அத்தலாக் 65 : 2)
ஆகவே சாட்சி பகர்வதற்கு நீதிசெலுத்தும் பண்பு இருக்கவேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும்போது கலீபாவாக நியமனம் செய்யப்படுபவர் நீதிசெலுத்தும் பண்பை பெற்றிருக்கவேண்டும் என்பது மிக அவசியமாகும்.
6 அவர் சுதந்திர மனிதராக இருக்கவேண்டும், அடிமையாக இருக்கும் மனிதர் தன்னுடைய எஜமானருக்கு உரிய சொத்தாக இருக்கிறார். ஆகவே அவர் தன்னுடைய விவகாரங்களை தன் விருப்பப்படி நடத்திச் செல்வதற்கு உரிமையோ அல்லது அதிகாரமோ பெற்றவர் அல்ல.
7. அவர் திறன் பெற்றவராக இருக்கவேண்டும், பைஅத் பெறும்போது உறுதியளிக்கப்பட்ட கிலாபத்தின் நிபந்தனைகளை நிலைநிறுத்தும் பணியில் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் ஆற்றல் பெற்றவராக அவர் இருக்கவேண்டும். கிலாபத்தை நிலைநிறுத்தும் பணியில் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத பலவீனராக அவர் இருக்கக்கூடாது.
கலீபா பதவிக்கு நியமனம் செய்யப்படும் ஒருவர் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகள் அல்லது பெற்றிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். வையல்லாது கூறப்படும் தகுதிகள் உறுதியான இஸ்லாமிய ஆதாரங்களின் அடிப்படையில் இருக்குமாயின் அவைகள் முன்னுரிமை கொடுக்கும் தகுதிகளாக இருக்குமே தவிர அடிப்படை தகுதிகளாக இருக்காது, இது ஏனெனில் கிலாபத் ஒப்பந்தத்திற்கு கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறப்படும் தகுதிகள் திட்டவட்டமான கோருதலை (طلباً جازماً - decisive command)சுட்டிக்காட்டுகின்ற கரீனாவை பெற்றுள்ள உறுதியான இஸ்லாமிய ஆதாரங்களாக இருக்க வேண்டும்.இத்தகைய முறையில் கூறப்படாத ஆதாரங்கள் முன்னுரிமை தகுதிகளை குறிப்பிடுவதாகவே கருதப்படும்.
மேலும் கலீபாவாக வருபவர் குறைஷ் கோத்திரத்தில் உள்ளவராக இருக்கவேண்டும் என்பது நிபந்தனையில்லை.
முஆவியா அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதை நான் செவியுற்றேன்.
إن هذا الأمر في قريش لا يعاديهم أحد إلاّ كبه الله على وجهه ما أقاموا الدين
"நிச்சயமாக இந்த விவகாரம்(ஆட்சி) குறைஷியர்களிடம் இருக்கிறது, அவர்கள் தீனை நிலைநாட்டும்போது எவரேனும் அவர்களுடன் சர்ச்சை செய்வாராயின் அவர்களை அல்லாஹ் நரகநெருப்பில் முகம் குப்புற வீழ்த்திவிடுவான்"
இப்ன்உமர்(ரலி) அறிவித்து புஹாரியில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.
لا يزال هذا الأمر في قريش ما بقي منهم اثنان
"குறைஷியர்கள் இருவர் இருக்கும்வரையில் இந்தவிவகாரம் (ஆட்சி) அவர்களை விட்டும் நீங்காது"
மாறாக, ஆட்சிபுரிதல் குறைஷயர்களிடம் இருக்கிறது என்றும் அதற்கு அவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள் என்றும் அதேசமயத்தில் அது மற்றவர்களிடம் இருப்பதும் சட்டரீதியானதே என்ற அர்த்தத்தைதான் கொடுக்கின்றன. இவ்வாறாக குறைஷியர்களைப் பற்றிய இந்த ஹதீஸ் அறிவிப்பு மற்றவர்கள் கலீபாவாகவோ அல்லது வேறெந்த ஆட்சியாளர்களாகவோ வருவதை தடுக்கவில்லை. இதனடிப்படையில் இது குறைஷியர்களுக்கு ஆட்சிபுரிதலில் முன்னுரிமை கொடுக்கக்கூடிய நிபந்தனையாக இருக்கிறதே தவிர ஒப்பந்தத்திற்குரிய கட்டாய நிபந்தனையாக இல்லை.
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக புஹாரியில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது.
اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه زبيبة
"உலர்ந்த திராட்சையைப் போன்ற தலையை உடைய ஹபஷாவின்(அபிஸீனியா) அடிமை (அமீராக இருந்து) உங்கள்மீது ஒரு செயலை ஏவினாலும் அவருக்கு செவிமடுங்கள் கட்டுப்படுங்கள்"
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக அபூதர்(ரலி) அறிவித்து முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.
أن أسمع وأطيع وإن كان عبداً مُجدَّع الأطراف أوصاني خليلي
தட்டையான மூக்கும் தடித்த உதடுகளும் கெண்ட அடிமை (அமீராக இருந்ததார்) என்றாலும் அவருக்கு செவிமடுக்கவேண்டும் என்றும் கட்டுப்படவேண்டும் என்றும் எனது தோழர் (இறைத்தூதர்-ஸல்) எனக்கு உபதேசம் செய்தார்கள்"
அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறியதாக மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
إن أُمّر عليكم عبد مُجدَّع أسود يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوا
"தட்டையான மூக்குடைய கருப்பு அடிமை உங்களுக்கு அமீராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தின்படி உங்களை வழிநடத்தினால் அவருக்கு செவிமடுங்கள் கட்டுப்படுங்கள்"
இந்த ஹதீஸ்களின் அறிவிப்புகள் குறைஷியர்களோடு மட்டுமோ அல்லது அரபுகளோடு மட்டுமோ கிலாபத்தை கட்டுப்படுத்தவில்லை என்ற அடிப்படையில் மற்றவர்கள் அதை ஏற்பதற்கு எந்தவிதமான தடையுமில்லை.
மேலும் கலீபாவாக வருபவர் ஹாஷிமீ (Hashimite- ஹாஷிம் குடும்பத்தைச் சார்ந்தவர்) அல்லது அலவீ (Alawite –அலீ (ரலி) யின் குடும்பத்தைச் சார்ந்தவர்) ஆகிய வம்சாவழியை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதும் நிபந்தனையல்ல. ஏனெனில் அல்லாஹ்வின்தூதர்(ஸல்) பனூஹாஷிம். பனூஅலீ ஆகியவர்களில் இல்லாதவர்களுக்கு ஆட்சிப்பொறுப்பை கொடுத்துள்ளார்கள் என்ற திட்டவட்டமான அறிவிப்புகள் உள்ளன. மேலும் தபூக் படையெடுப்பிற்கு மதீனாவை விட்டு அவர்கள்(ஸல்) சென்றபோது முஹம்மது இப்ன் மஸ்லமாவை(ரலி) மதீனாவின் ஆட்சியாளராக நியமனம் செய்துள்ளார்கள். இவர் ஹாஷிமீயாகவோ அல்லது அலவீயாகவோ இல்லை. மேலும் முஆத் இப்ன் ஜபல்(ரலி) அம்ர் இப்ன்ஆஸ்(ரலி) ஆகியோர்களை எமன் பிரதேசத்திற்கு ஆட்சியாளர்களாக அல்லாஹ்வின்தூதர்(ஸல்) நியமனம் செய்துள்ளார்கள். இவர்கள் எவரும் ஹாஷிமீயாகவோ அல்லது அலவீயாகவோ இல்லை. மேலும் அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருக்கு முஸ்லிம்கள் கிலாபத்திற்குரிய பைஅத் செய்தார்கள் என்றும் இவர்கள் ஒவ்வொருவரும் பனூஹாஷிமாக இல்லாதபோதும் அலீ(ரலி) இவர்களுக்கு பைஅத் செய்தார் என்றும் திட்டவட்டமான அறிவிப்புகள் கூறுகின்றன. இவர்கள் கிலாபத் பொறுப்பை ஏற்றபோது அனைத்து ஸஹாபாக்களும் ஒருமித்து பைஅத் செய்தார்கள் என்றும் ஒருவர்கூட இவர்கள் பனூஹாஷிமாக அல்லது பனூஅலீயாக இல்லை என்பதற்காக பைஅத் செய்வதற்கு மறுக்கவில்லை என்றும் உறுதியான அறிவிப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே பனூஹாஷிமாக (ஹாஷிமீ) அல்லது பனூஅலீயாக (அலவீ) இல்லாதவர்களும் கலீபாவாக வருவதற்கு அனுமதி உண்டு என்ற இந்த ஆதாரம் இஜ்மாஅஸ்ஸஹாபாவில் உள்ளதாகும். இந்த இஜ்மாவில் பனூஹாஷிமான அலீ (ரலி), இப்ன்அப்பாஸ் (ரலி) மற்றும் இதர ஹாஷிம் குடும்பத்தார்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். அலீ(ரலி) யின் குடும்ப அந்தஸ்த்து பற்றியும் அல்லாஹ்வின்தூதரின்(ஸல்) குடும்ப அந்தஸ்த்து பற்றியும் கூறும் ஹதீஸ் அறிவிப்புகளைப் பொறுத்தவரை அவை அவர்களுக்கு இருக்கும் முன்னுரிமைத் தகுதிகளை சுட்டிக்காட்டுகின்றனவே ஒழிய கிலாபத்தை அவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யவேண்டும் என்ற எந்த நிபந்தகையையும் அவைகள் சுட்டிக்காட்டவில்லை.
sources from warmcall.blogspot.com
DIPவுடன் இணையுங்கள்
http://www.facebook.com/groups/dinulislamparadise/
0 comments:
Post a Comment