ஓரங்களில் குறையும் பூமியும், குர்ஆனின் புவியியல் கல்வியும்
காலம் கடந்து செல்லச் செல்ல, விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அல்குர்ஆனின் நம்பகத் தன்மையும், அது இறைவனின் வார்த்தைகள் தான் என்ற அசைக்க முடியாத உண்மையும் மேலோங்கிக் கொண்டே போகின்றது.
அல்லாஹ் தன் வார்த்தையான அல்குர்ஆனில் குறைந்து கொண்டு வரும் பூமியின் நிலப்பரப்பைப் பற்றி பேசுகின்றான்.
பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன்.
(அல்குர்ஆன் 13:41)
அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம். ”பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்” என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (அல்குர்ஆன் 21:44)
பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த அறிவியல் உண்மையை நவீன விஞ்ஞானம் எவ்வாறு ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
இது பற்றிய நவீன விஞ்ஞான ஆராய்ச்சி.
பூமி நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது.
1. மேற்பரப்பு (Crust)
2. Mantle
3. வெளி மையம் (Outer Core)
4. உள் மையம் (Inner Core)
பூமி அதன் ஓரப் பகுதிகளில் குறைவடைதலுடன் டெக்டோனிக் அடுக்குகள் (Tectonic plates) என்பவையே சம்பந்தப்படுகின்றன. முதலில் டெக்டோனிக் அடுக்குகள் (Tectonic plates) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு (Tectonic plates)
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு என்பது நிலவியல் கோட்பாடுகளில் ஒன்று. இக் கோட்பாடு கண்டப் பெயர்ச்சித் தோற்றப்பாட்டை விளக்குவதற்கு எழுந்த கோட்பாடேயாகும். பூமியிலுள்ள கண்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்புடன் நகர்வது கண்டப்பெயர்ச்சி ஆகும்.
இக்கருதுகோள் முதன்முதலில் 1596ம் ஆண்டில் Abraham Ortelius என்ற புவியியலாளரால் முன்மொழியப்பட்டு பின் 1912ம் ஆண்டில் பூகோள,வானியலுடன் சம்பந்தப்பட்ட விஞ்ஞானியான Alfred Wegener என்பவரால் கோட்பாடாக விளக்கப்பட்டது. பின்னர் 1960ம் ஆண்டில் தக்க நிலவியல் சான்றுகளுடன் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு என்ற கோட்பாட்டுடன் நகர்தலுக்கான காரணமும் கண்டறியப்பட்டது. தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக் கோட்பாட்டின் படி பூமியின் உட்பகுதி வெளிக் கற்கோளம் (lithosphere), மற்றும் உள் மென்பாறைக்கோளம் (asthenosphere) ஆகிய இரண்டு படைகளால் ஆனது.
கற்கோளம் மென்பாறைக்கோளத்தின் மீது மிதந்து கொண்டு இருப்பதுடன் பத்து தட்டுகளாகப் பிரிந்தும் உள்ளது. இவை ஆபிரிக்க, அண்டார்ட்டிக்,யுரேசிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசுபிக், கோகோஸ், நாஸ்கா மற்றும் இந்தியத் தட்டுக்கள் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. மேற்கூறிய தட்டுகளும், மேலும் பல சிறிய தட்டுகளும் ஒன்றுக்குச் சார்பாக இன்னொன்று என தட்டு எல்லைகளில் நகர்கின்றன. தட்டுக்கள் ஒன்றுக்குச் சார்பாக இன்னொன்று நகர்கின்ற விதத்தை அடிப்படையாகக் கொண்டு தட்டு எல்லைகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன.
அவை:
1.ஒருங்கும் தட்டு எல்லை (எல்லைகளில் தட்டுக்கள் ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு இருத்தல்)
இங்கு புவி மேற்பரப்பு சீர்குழைக்கப்பட்டு ஒரு தட்டு மறு தட்டுக்குக் கீழாக மறு சீரமைக்கப்படுகின்றது. இவை உள்ளிழுத்தல் மண்டலங்கள் (subduction zones) என்று அழைக்கப்படுகின்றன. தட்டுக்கள் ஒருங்குதலாகும் போது பெரும்பாலும் மலைகள், எரிமலைகள் தோன்றுகின்றன. மூன்று வகையான ஒருங்கும் தட்டு எல்லைகள் காணப்படுகின்றன.
1. சமுத்திர – கண்ட ஒருங்குதல் தட்டு எல்லை.
2. சமுத்திர – சமுத்திர ஒருங்குதல் தட்டு எல்லை.
3.கண்ட – கண்ட ஒருங்குதல் தட்டு எல்லை.
2. விலகும் தட்டு எல்லை (தட்டுக்கள் ஒன்றிலிருந்து விலகிச் செல்லுதல்)
விலகும் தட்டு எல்லைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தட்டுக்கள் ஒன்றையொன்று இழுப்பதுபோல் புதிய புவி மேற்பரப்பு உருவாக்கப்படும். சமுத்திரங்கள் விசாலமாவதற்கான காரணம் தட்டுக்கள் விலகுதலேயாகும். கீழுள்ள படத்தில் உள்ளவாறு விலகும் தட்டு எல்லையின் போது பிளவு ஏற்பட்டு அல்லது பெரிய நிலப்பரப்பு பிளவாகி வேறுபட்டு அதனை சுற்றியுள்ள இடைவெளி நீரால் நிரப்பப்படும். இதற்கு உதாரணம் ஐஸ்லாந்து.
3.உருமாறும் தட்டு எல்லை (இரண்டு தட்டுக்கள் ஒன்றின் மீது ஒன்று வழுக்கிச் செல்லுதல்) என்பனவாகும்.
இரண்டு தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று கிடைத்தளமாக சரிந்து செல்லுதலே உருமாறும் தட்டு எல்லையாகும். பெரும்பாலான உருமாறும் தட்டு எல்லைகள் கடற் தளங்களிலேயே காணப்படுகின்றன. பொதுவாக முகடுகளில் பரவி தட்டுகளில் zig zag வடிவ ஓரங்களை உருவாக்கி சிறிய பூகம்பங்களை ஏற்படுத்தக்கூடியன.
நிலநடுக்கம், எரிமலை நிகழ்வுகள், மலைகள் உருவாக்கம், கடற் பள்ளங்கள் என்பன தட்டுக்களின் எல்லைகளை அண்டியே எற்படுகின்றன.
புவியின் உட்பகுதி அதன் பொறிமுறை வேறுபாடுகளுக்கு அமையவே கற்கோளம் (lithosphere), மென்பாறைக்கோளம் (asthenosphere) எனப் பிரிக்கப்படுகின்றது. ஒப்பீட்டளவில் கற்கோளம் குளிர்ந்தும், உறுதியானதுமாகும். ஆனால் மென்பாறைக்கோளம் சூடானதாகவும், பொறிமுறைப் பலம் குறைந்ததாகவும் காணப்படுகின்றது.
தட்டுப் புவிப்பொறைக் கோட்பாட்டின் மிக முக்கியமான கொள்கை கற்கோளம் வெவ்வேறான புவிப்பொறைத் தட்டுகளாக திரவம் போன்ற மென்பாறைக்கோளத்தின் மீது மிதந்து கொண்டிருக்கிறது என்பதாகும். இடத்துக்கிடம் வேறுபட்ட திரவத் தன்மையுடன் இருக்கும் இந்த மென்பாறைக்கோளம் அதன் மீது மிதந்து கொண்டிருக்கும் புவிப்பொறைத் தட்டுக்களை வெவ்வேறு திசைகளில் நகரச் செய்கிறது.
இரு தட்டுகள் ஒன்றையொன்று அவற்றின் பொதுத் தட்டு எல்லையில் சந்திக்கின்றன. இத் தட்டு எல்லைகள் பொதுவாக பூமியதிர்ச்சி மற்றும் மலைகள் உருவாக்கம் போன்ற நில உருவவியலுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. உலகிலுள்ள பெரும்பாலான உயிர்ப்புள்ள எரிமலைகள் தட்டு எல்லைகளிலேயே அமைந்துள்ளன. இவற்றுள் பசுபிக் தட்டின் ‘தீ வளையம்’மிக உயிர்ப்புள்ளதும், பிரபல்யமானதுமாகும்.
புவிப்பொறைத் தட்டுக்கள் இரண்டு விதமான கற்கோளங்கனைக் கொண்டவை. அவை கண்டம் சார்ந்த (continental crust) மற்றும் கடல் சார்ந்த (oceanic crust) கற்கோளங்களாகும். உதாரணமாக, ஆபிரிக்கத் தட்டு ஆபிரிக்கா கண்டத்தையும், அத்திலாந்திக் மற்றும் இந்து சமுத்திர கடற் பகுதிகளின் தரைகளையும் உள்ளடக்குகின்றது. இந்த வேறுபாடு இப் பகுதிகளை உருவாக்கியுள்ள பதார்த்தங்களின் அடர்த்திகளை அடிப்படையாகக் கொண்டது. கடல் சார்ந்த கற்கோளம், கண்டம் சார்ந்த கற்கோளத்திலும் அடர்த்தி கூடியதாகும். இதன் விளைவாகவே கடல் சார்ந்த கற்கோளங்கள் எப்பொழுதும் கடல் மட்டத்திற்கு கீழேயே காணப்பட கண்டம் சார்ந்த கற்கோளங்கள் கடல் மட்டத்திற்கு மேலே காணப்படுகின்றது.
கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள நான்கு பூலோக மாதிரிப் படங்களில் மேலுள்ள இடது பூலோகத்தில் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகம் ஒரு தனி நிலப்பரப்பாக இருந்தமையைக் காட்டுகின்றது. கீழுள்ள இடது பூகோள படமானது 125 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியின் நிலப்பரப்பு சற்று பிளவுபட்டு காணப்படுகின்றது. மேலும் மேலே வலது புறத்திலுள்ள 50 மில்லியன் வருடங்களுக்கு முன்புள்ள பூகோளத்தில் மேலதிகமாக பூமியின் நிலப்பரப்பு பிளவுபட்டு ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றது. கடைசியாக கீழ் வலது புறத்திலுள்ள பூகோள படமானது பூமியின் இன்றைய நிலையைக் காட்டுகின்றது. அதாவது பூமி இன்று தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் தொழிற்பாட்டின் மூலம் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் (பூகம்பம், எரிமலை, நிலப்பரப்பு பிளவுபட்டு அவ்விடம் கடல் நீரால் நிரப்பப்படுதல்) பூமியின் அதன் ஓரப் பகுதிகளில் குறைந்து கொண்டு வருகின்றது.
இம் மாபெரும் அறிவியல் உண்மையை படிப்பறிவே இல்லாத, அறிவியல் சிந்தனைக்கு எந்த வழியும் இல்லாத காலப்பகுதியல் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க வாய்ப்பே இல்லை. இவ் வகையான அறிவியல் உண்மைகளை ஆராய்ச்சியின் மூலம் அல்லாது எந்த ஒரு மனிதனாலும் எக்கால கட்டத்திலும் சாதாரணமாக கூறிட விட முடியாது. மேலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பூமி அதன் நிலப்பரப்பில் குறைந்து வருகின்றது என்று மேற் குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடாமல் பூமி அதன் ஓரப் பகுதிகளில் குறைந்து வருகின்றது என மிகவும் நுணுக்கமாக இந்த அறிவியல் உண்மையைக் குறிப்பிடுகின்றான்.
எனவே, 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வார்த்தையாக மேலுள்ள அல்குர்ஆன் வசனங்கள் இருக்க முடியாது. அவை இவ் அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ் ஒருவனின் வார்த்தைகளே தவிர வேறில்லை.
-http://www.sltjweb.com
0 comments:
Post a Comment